ஓட்டோ ஜெஸ்பெர்சன்
ஓட்டோ ஜெஸ்பெர்சன் | |
---|---|
ஜெஸ்பெர்சன், அண். 1915 | |
பிறப்பு | ராண்டர்ஸ், டென்மார்க் | 16 சூலை 1860
இறப்பு | 30 ஏப்ரல் 1943 ரோஸ்கில்டு, டென்மார்க் | (அகவை 82)
பணி | மொழியியல் |
ஜென்ஸ் ஓட்டோ ஹாரி ஜெஸ்பெர்சன் (16 சூலை 1860 - 30 ஏப்பிரல் 1943) ஆங்கில மொழியின் இலக்கணத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு டேனிஷ் மொழியியலாளர் ஆவார். ஸ்டீவன் மிதன் அவரை "பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் சிறந்த மொழி அறிஞர்களில் ஒருவர்" என்று விவரித்தார். [1]
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]ஓட்டோ ஜெஸ்பெர்சன் ஜட்லாண்டில் உள்ள ராண்டர்ஸில் பிறந்தார். சிறுவனாக இருந்தபோது டேனிஷ் மொழியியலாளர் ராஸ்மஸ் ராஸ்கின் பணியால் ஈர்க்கப்பட்டார். மேலும், ராஸ்கின் இலக்கணங்களின் உதவியுடன் ஐஸ்லாண்டிக், இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளைக் கற்றுக்கொண்டார். [2] அவர் 1877- ஆம் ஆண்டில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தனது 17 வயதில் சேர்ந்தார். தொடக்கத்தில் சட்டம் படித்தார். ஆனால், தனது மொழிப் படிப்பை மறக்கவில்லை. 1881 ஆம் ஆண்டில் அவர் தனது கவனத்தை முழுவதுமாக மொழியியலில் மாற்றினார், [3] மேலும் 1887 ஆம் ஆண்டில் ஆங்கிலம் மற்றும் இலத்தீன் ஆகியவற்றை தனது இரண்டாம் மொழிகளாகக் கொண்டு பிரெஞ்சு மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். பள்ளி ஆசிரியராகவும், டேனிஷ் நாடாளுமன்றத்தில் சுருக்கெழுத்து நிருபராகவும் பகுதி நேரப் பணியின் மூலம் அவர் தனது படிப்பின் போது தன் வாழ்வின் தேவைகளை நிர்வகித்தார்.
சூன், 1886 இல், ஜெஸ்பெர்சன் சர்வதேச ஒலிப்பு சங்கத்தின் உறுப்பினரானார், இந்த அமைப்பு பின்னர் ஒலிப்பு ஆசிரியர் சங்கம் என்று அழைக்கப்பட்டது. உண்மையில் ஒவ்வொரு மொழியும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஒலிப்பு எழுத்துக்களை உருவாக்கும் யோசனையை முதலில் ஜெஸ்பெர்சன் பால் பாஸ்ஸிக்கு அனுப்பிய கடிதத்தில் முன்வைத்தார். [4]
1887-1888 இல், அவர் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார், ஹென்றி ஸ்வீட் மற்றும் பால் பாஸ்ஸி போன்ற மொழியியலாளர்களைச் சந்தித்தார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது வழிகாட்டியான வில்ஹெல்ம் தாம்சனின் ஆலோசனையைப் பின்பற்றி, இவர் ஆகத்து 1888 இல் கோபன்ஹேகனுக்குத் திரும்பினார் மற்றும் ஆங்கில வழக்கு முறைமையில் தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை எழுதத் தொடங்கினார். அவர் தனது ஆய்வுக் கட்டுரையை 1891-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முடித்தார்.
கல்வி வாழ்க்கை மற்றும் பணி
[தொகு]ஜெஸ்பெர்சன் 1893 முதல் 1925 வரை கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார், மேலும் 1920-21 இல் பல்கலைக்கழகத்தின் முகவராகப் பணியாற்றினார். அவரது ஆரம்பகாலப் பணி முதன்மையாக மொழி கற்பித்தல், மொழி சீர்திருத்தம் மற்றும் ஒலிப்புமுறையில் கவனம் செலுத்தியது ஆகியவை ஆகும். ஆனால், அவர் தொடரியல் மற்றும் மொழி வளர்ச்சியில் அவர் செய்த பணிகளுக்காக மிகவும் பிரபலமானவர் ஆனார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mithen, Steven (2005). The Singing Neanderthals: The Origins of Music, Language, Mind, and Body. London: Orion Publishing Group. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-7802-2258-5.
- ↑ "Otto Jespersen".
- ↑ "Otto Jespersen's life and career".
- ↑ "The Principles of the International Phonetic Association: 1949". Journal of the International Phonetic Association 40 (3): 299–358. 2010. http://www.jstor.org/stable/44526579.